Sunday, December 28, 2008

அலையில் கரைந்த காலங்கள்...

அலையில் கரைந்த காலங்கள்...

அண்மையில் என் நண்பன் விமலாதித்தன் தனது வலைப்பூவில் எழுதிய "வாழ்ந்த அதிகாலை" வாசித்ததிலிருந்து கடந்து வந்த நாட்களின் நினைப்புகள் அதிகமாகவே வருகின்றது. அதுவும் 2000 - 2004 காலம், நினைத்தாலே எப்போதும் கண்கள் பனிக்கும்...

அதிலும் வெள்ளவத்தை கடற்கரையின் மணலில் , அந்த கற்குவியலில் கால் பதித்து காலங்களை கரைத்த நினைவுகள் எப்போதும் நெஞ்சு மறக்காதவை.

நட்புக்குள் வரும் பிரிவுகள் எப்போதைக்கும் நிரந்தரமானவை இல்லை.... ( நட்பில் உண்மையான, உண்மையில்லாத என்று ஏதும் இல்லை என்பது என்கருத்து) உண்மையா இல்லையா என்று அந்த வெள்ளவத்தை கடலிடமே கேளுங்கள்... எங்கள் கதை அதற்கு மட்டுமே தெரியும்...

கரைந்த அந்த நினைவுகளில் பல வெளியே யாருக்கும் சொல்ல முடியாதவை, ஒரு சில மட்டும் பலரோடும் பகிரக்கூடியவை.

அன்று ஒருநாள் கடற்கரையில் உள்ள கற்கதிரை ஒன்றில் இருந்து அளவளாவிக் கொண்டிருந்தோம். வழக்கமாக ஒருதலைப்பில் தொடங்கி எங்கேயோ தொடக்கத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு தலைப்பில் போய் முடியும்.
பெரும்பாலும் வாக்குவாதங்கள் குறைவாகவே இருக்கும் காரணம் எனக்கு பொதுவாக அவ்வளவு வாசிக்கும் பழக்கம் அப்போது இல்லை, சினிமா சம்பந்தமான மட்டும் வாசிப்பதே வழக்கம்(கிசு கிசு என்று மட்டும் நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல). ஆனால் எந்த தலைப்பை (சினிமா சம்பந்தமா நம்மள அசைக்க முடியாது :P) எடுத்தாலும் கதைக்கு கதை சொல்லும் அளவு புத்தக பூச்சி விமலாதித்தன். பொதுவாக ஒருவருக்கு தெரிந்த விடயங்கள் (விமலாதித்தனுக்கு என்று சொல்வதே பொருந்தும், எனக்கு அவ்வளவு அறிவு இல்லை; அப்பவும் சரி இப்பவும் சரி ) மற்றவருக்கு தெரிவதில்லை.

அன்று மட்டும் தான் (இன்றுவரைக்கும்)ஒரே தலைப்பில் நம் உரையாடல் முடிந்தது... அன்று பேசியவையும் அதற்கு பிறகு நடந்தவையும் அந்த கடற்கரையின் அலைகளிலே கரைந்து போனவை...

அன்று அந்த அந்தி வானத்தில் வரைந்த கோலம் போல அந்த நினைவுகளும், நினைவுகளின் "சிருஷ்டிகளும்" கரைந்தே போனதுதான் உண்மை.

இன்று ஆளுக்கு ஒரு பக்கமாக இருந்தாலும் அவனைத்தவிர யாரையும் நம்ம மனம் மறுக்கிறது. அன்று சேர்ந்து திரிந்த நாட்கள் மறுபடியும்....

என் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்த அந்த அலை கொஞ்சும் கடற்கரையின் கால் பதித்து நடை போட வா நண்பா!!!

இரா பிரஜீவ்
29/12/2008

Sunday, December 21, 2008

என் அறிமுகம்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பித்து அளவுக்கு மீறிய பஞ்சி காரணமாக தொடர முடியாம போன இந்த பயணம் இப்ப ஏதோ புதிய ஞானம் வந்து எழுத தொடங்குகிறேன்...

பாப்பம் எவ்வளவு தூரம் போறன் எண்டு...

சரி சரி இப்ப என்னை பற்றிய ஒரு சின்ன அறிமுகம்

பெயர் : இரா பிரஜீவ் (இரஜினி என்ற அம்மாவின் பெயரின் சுருக்கம் தானுங்கோ அந்த இரா)
தொழில், படிப்பு: வெட்டுறதும் ஒட்டுறதும் (சிம்பிளா சொன்னா Film Editing)
உபதொழில்: மொழி விலக்கு இல்லாம எல்லா மொழிப்படங்களையும் பாக்கிறது
பிடித்த பொருள்: புதிதாக வங்கிய Apple Book Pro
அடிக்கடி மறப்பது: என் வீட்டு தொலைபேசி இலக்கம்
மறக்க முடியாதது: Windows
சமீபத்திய எரிச்சல்: விடுமுறைக்கு சென்ற நண்பனின் செல்ல மீன்களை பராமர்க்கும் பொறுப்பு (என்ன கொடுமை இது!)

இதுவரைக்கும் தந்ததே போதும் என நினைக்கிறேன்....

இனி பதிவுகளோடு சந்திக்கிறேன்...